சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பொறுப்பில் இருந்து சதாசிவம் எம்.எல்.ஏ நீக்கம் ; டாக்டர் ராமதாஸ் அதிரடி
பா..ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த சதாசிவத்தை டாக்டர் ராமதாஸ் இன்று பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக வெடிக்காரனூர் வி.இ.ராஜேந்திரன் நியமிக்கபப்ட்டு இருக்கிறார்.

மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சதாசிவம் மேட்டூர் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.ஆக இருக்கிறார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோதும், மற்ற எந்த கூட்டத்திலும் சதாசிவம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







