தலைமையாசிரியை வீட்டில் 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் திருட்டு
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகர் கல்கி தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி அமிர்தலீலா (55). வெயிலுகந்தபுரம் அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையான இவர், நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டார்.

இவரது மகன் கட்டிட பொறியாளர் ஆனந்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய பிரிவில் வேலை பார்க்கும் மருமகள் இந்து ஆகியோரும் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டனர்.

மாலையில் பள்ளி முடிந்து அமிர்த லீலா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.








