கோவில்பட்டி புது அப்பனேரியில் வீடு புகுந்து திருடிய 4 பேர் சிக்கினர்; 16½ பவுன் தங்க கட்டி பறிமுதல்
கோவில்பட்டி புது அப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லசிவன்(வயது 67). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்து 19½பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் (எ) சகாயராஜ் (48), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதீஷ் (37), சாத்தூர் புல்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (43) மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பொன்முருகன் (53) ஆகியோர் என்பதும் கடந்த 1.6.2025 அன்று கோவில்பட்டி புது அப்பனேரி சக்கரபாணிநகரைச் சேர்ந்த நல்லசிவன வீட்டில் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் 4பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி மேற்படி திருடப்பட்ட நகைகளில் சுமார் 16½ பவுன் தங்க கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை எதிரிகளிடமிருந்து கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







