உண்ணாவிரத போராட்டம்: கோவில்பட்டியில் அரசு பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.

மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு மற்றும் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். மத்திய அரசுககு இணையான ஊதியம், அகவிலைப்படி, போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டுமேன வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் அரசு பணியாளர்கள் சங்க செயல்தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கணேசன், தென்காசி மாவட்ட தலைவர் சண்முகராஜ், ஓய்வு பெற்ற அரசு பணியாளர் சங்க தலைவர் நல்லைய்யா, மதுரை நெல்லை மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு தோழமை சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரசார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்







