பாராட்டு விழா அனுமதியை நிராகரித்த துணை போலீஸ் கமிஷனர்; பெங்களூரு விவகாரம் பற்றி புதிய தகவல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
பாராட்டு விழா நடத்துவதற்கான அனுமதியை நிராகரித்து அரசுக்கு, துணை போலீஸ் கமிஷனர் எழுதிய கடிதம் தற்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா கேட்டு, கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியது.

ஆனால் பாதுகாப்பு கருதி விதானசவுதாவில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று துணை போலீஸ் கமிஷனர் கரிபசவன்ன கவுடா, நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சத்தியவதிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-
ஆர்.சி.பி. அணிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் குறைவாக உள்ளதால், பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை ஏற்படும். இந்த பாராட்டு விழாவுக்கு விதானசவுதா ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் கூட்டாக வருவார்கள். இதற்கு அனுமதி வழங்க கூடாது.

விதானசவுதாவில் தற்போது குறைவான கண்காணிப்பு கேமராக்களே உள்ளன. பாதுகாப்புக்காக மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கால நேரமாகும்.பெரிய அளவில் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பங்கேற்பதால், விதானசவுதாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காலஅவகாசம் வழங்க வேண்டும்.
அதிகளவில் ரசிகர்கள் திரளுவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார், உயர் அதிகாரிகளை பெங்களூருவுக்கு வரவழைக்க வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 3-ந்தேதி நள்ளிரவுதான் ஆர்.சி.பி. அணி சாம்பியன் கோப்பை வென்றது. எனவே மறுநாள்(4-ந்தேதி) பாராட்டு விழா நடத்துவதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது, உரிய காலஅவகாசம் வேண்டும் என்று துணை போலீஸ் கமிஷனர் கரிபசவன்ன கவுடா கூறியிருந்தது அம்பலமாகி இருக்கிறது.
ஆனால் துணை கமிஷனரின் இந்த பரிந்துரையை ஏற்காமல் அவசரம், அவசரமாக அரசு சார்பில் விதானசவுதாவில் பாராட்டு விழாவும், கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டமும் நடந்திருக்கிறது.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பாவி ரசிகர்கள் 11 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல், கர்நாடக அரசு பணியாளர் மற்றும் சீர்திருத்த துறையின் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியவதியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனால் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி பணியிடை நீக்க நடவடிக்கை பாயுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை தனது காவேரி இல்லத்திற்கு வரும்படி அழைத்து முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் இதுகுறித்த வழக்கு குறித்தும், அரசு சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.







