கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையில் நடைபெற்றது.

நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி மற்றும் பெங்களூரு கனரா வங்கி ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

நேற்று கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் நான்கு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று அரை இறுதி போட்டிக்கு நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன,
இதை தொடர்ந்து நாளை 31.5.2025 சனிக்கிழமை அரையிறுதி போட்டிகள் நடக்கிறது.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.







