கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை தொடருகிறது; மேலும் 3 பேர் சிக்கினர்
கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சில நாட்களுக்கு முன்பு 3 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்,
தொடர்ந்து மூபப்ன்பட்டி பகுதியில் காரில் மறைத்து வைத்து கஞ்சா விற்றதாக 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் போலீசார் கஞ்சா வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கடையின் பின்புறம் க,மறைத்து வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மீகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி தேவர்குளம் நடுத் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.







