வெம்பூர் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு: முதல் அமைச்சருக்கு கிராம மக்கள் தபால் அனுப்பும் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
இதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் இருந்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி தலைமையில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு 300 தபால்கள் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக கையெழுத்து போட்டு அனுப்பி இருக்கும் தபாலில் கூறி இருப்பதாவது:-
ஐயா; வணக்கம்.
என்னுடைய விவசாய நிலத்தில் வெம்பூர் சிப்காட் பூங்க அமைவதாக அறிந்தேன், எனது குடும்பத்திற்க்கு விவசாயத்தை தவிர்த்து வேறு வருமானம் கிடையாது. என் விவசாய நிலத்தை எடுக்கும் பட்சத்தில், என் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் ஆகவே, தாங்கள் எனது விவாசாய நிலத்தை காப்பாற்றிதரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 21ம் தேதி அனைத்து கட்சி சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு வெம்பூர் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.







