கோவில்பட்டி விழாவில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.
கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.20.55 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டியதற்கான சாவிகளையும வழங்கினார்.,
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.81 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.90 லட்சத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.86.86 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “முன்பெல்லாம் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டிலிருந்து ஒரு கால் செயல்படாத நிலையில் இருந்தாலும் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்ற உத்தரவைத்தொடர்ந்து அதனுடைய எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







