ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்- விவேகானந்தர் பிறந்த நாள்
சுவாமிஜியின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்தி அடைந்த பின்னர் சுவாமி விவேகானந்தர் பல்வேறு புனைப் பெயர்களில் பாரதம் முழுவதும் சுற்றி வந்து பாரத மக்களை பற்றி புரிந்து கொண்டார்.
பாரத மக்களும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக புரிய தொடங்கினர்.. மன்னர்கள்,மகான்கள், மாணவர்கள்,மாதர்கள் என்று சமுதாயத்தின் பல தரப்பினரும் சுவாமிஜியின் கருத்துகளுக்கு செவி கொடுக்க ஆரம்பித்திருந்த நேரம்… பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக சுவாமிஜி கன்னியாகுமரிக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்து விட்டு வெளியே வருகிறார்.
கடல் நடுவே மிகப்பெரிய பாறையை பார்க்கிறார். பாரதத்தின் தென்கோடியில் தான் இருப்பதையும் பாறையை சென்று அடைய வேண்டும் என்று தன் உள்ளுணர்வால் உணர்கிறார். அலை கடலுக்கு நடுவே நீந்தியே சென்று பாறையை அடைகிறார்
அப்படியே அமர்ந்து தனது நீண்ட தவத்தை தொடங்குகிறார். 1883 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற மாநாடு அமெரிக்காவில் தொடங்கியது சுவாமிஜியின் பெயரையும் பேசுவோரின் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். சுவாமிஜியை பலமுறை பேசும் படி கூறியும் புது மேடைகளில் அதுவும் அந்நிய மொழிகளில் பேசி பழக்கம் இல்லாததால் அப்புறம் ஆகட்டும்,அப்புறம் ஆகட்டும் என்று மேடை ஏறுவதை தவிர்த்துக் கொண்டே வந்தார்.
கடைசியாக அவைத்தலைவர் இப்பொழுது பேசாவிட்டால் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்காது என்று சொல்லிவிட்டார். சரஸ்வதி தேவியையும் தனது மகா குருவையும் தியானித்துக் கொண்டே மேடை ஏறிய சுவாமிஜியின் முதல் முழக்கமே ” அமெரிக்க நாட்டு சகோதர, சகோதரிகளே” என்ற கம்பீரக் குரலாக இருந்தது.
அதுவரை பேசியவர்கள் வழக்கம்போல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற வார்த்தையிலே ஆரம்பித்து பேசினார்கள். சுவாமிஜியின் சகோதர, சகோதரிகளே என்ற வார்த்தை தனித்து கம்பீரமாக ஒலித்தது. அவரது அடி மனதில் இருந்து வந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அத்தனை பேரின் உள்ளத்தையும் தொட்டுவிட்டது. அப்போது எழுந்த கரகோஷம் அடங்கப் பல நிமிடங்கள் ஆனது.. அரை நொடியில் 6000 பேரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விட்டார்.
பின்னர் அவர் நாவில் இருந்து மடைதிறந்த வெள்ளம் என வார்த்தைகள் வந்து விழுந்தன. எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம். சகிப்புத்தன்மையை உலகிற்கு உணர்த்திய மதம் இந்து மதம். அல்லல் உற்றோருக்கு அடைக்கலம் வழங்குவது இந்து மதம்.
நதிகள் அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன அதுபோல் சமயங்கள் பலவாயினும் அனைத்தும் ஒரே கடவுளே சென்று அடைகின்றன. அதுவரை இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் மட்டமாகவே கருதி வந்திருந்த மேலை நாட்டவர்கள் முதன்முதலாக அதன் பெருமையை உணர ஆரம்பித்தார்கள்.
மறுநாள் பத்திரிகைகள் எல்லாம் சுவாமி விவேகானந்தரின் உருவப்படங்களை பெருமையோடு வெளியிட்டன. சிகாகோவின் வீதி எங்கும் அவரது படங்கள் ஒட்டப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் மதமாச்சரியங்களைக் கடந்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் மகாசபை எப்போது கூடினாலும் சுவாமி விவேகானந்தரின் வீர உரையை கேட்க பிரதிநிதிகள் ஆவலாக இருந்தனர். இந்திய வேதாந்த கொடி முதன் முதலாக மேல் நாடுகளில் பட்டோளி வீசி பறக்க துவங்கியது. இளைஞர்களுக்கு பல விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கி வந்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய சுவாமிஜி இந்திய மக்களால் பெரிதும் கவரப்பட்டு வரவேற்கப்பட்டார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 இந்திய அரசு தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறது. அவரது அறைகூவலை இளைஞர்களாகிய நாம் ஏற்று செயல்பட உறுதி ஏற்போமாக!.
ரெ.சுப்பா ராஜூ, மாநில அரசு விருதாளர். கோவில்பட்டி.







