பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில் , சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு உள்ளது.
இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது. 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு தரப்படுகிறது.
தூத்துக்குடி
. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் தொடங்கின. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்,.
தூத்துக்குடி மாவட்டம், குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ் ,மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்,
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், வட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன் மற்றும் வட்ட பிரதிநிதி அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







