ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறித்த ஆட்டோ டிரைவர்; போலீசில் பிடித்து கொடுத்த மகன்
திருச்சி குண்டூரை சேர்ந்த வசந்தா மாரிகண்ணு (வயது 80 ) என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தார். அங்கிருந்து திருச்சி செல்ல திட்டமிட்டிருந்தார்,.
அவர் பயணம் செய்ட ஆட்டோவை தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் சாமியார் தோட்டத்தை சேர்ந்த கணேசன் ஓட்டிசென்றார். குரோம்பேட்டை ஹவுசிங் போர்டு காலனி சாலை பச்சைமலை அருகே சென்றபோது வசந்தாவை மிரட்டி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் நகைகளை பறித்தார்..
பின்னர் ஆட்டோ டிரைவர் வசந்தாவை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது பற்றி தாம்பரம் காவல் நிலையத்தில் வசந்தா புகார் அளித்தார். அவரிடம் தாம்பரம் போலீசார், விசாரித்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் தனது வீட்டுக்கு சென்ற ஆட்டோ டிரைவர் கணேசன், 10 பவுன் நகையை பறித்த விஷயத்தை பெருமையுடன் கூறியிருக்கிறார். மேலும் அந்த நகையை அடகு வைத்து குடும்ப செலவுக்கு பயன்படுத்தலாம் என குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ராமச்சந்திரன், இப்படி செய்வது நியாயமே இல்லை. நம்மை நம்பி வந்தவரை மோசம் செய்யக்கூடாது என்று தந்தையை கடுமையாக திட்டினார்..
மேலும் நகையுடன் தனது தந்தையுடன் தாம்பரம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த போலீசாரிடம் விவரத்தை கூறி தந்தையையும், அவர் பறித்த நகையையும் போலீசாரிடமே ராமச்சந்திரன் ஒப்படைத்தார்.
ராமச்சந்திரனின் நேர்மையை பார்த்து ஆச்சரியமடைந்த போலீசார் அவரை வெகுவாக பாராட்டினார்கள். அவரது தந்தை, கணேசனை கைது செய்தனர். தவறு செய்தது தனது தந்தை என்றாலும் நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மொதக் நேரில் அழைத்து பாராட்டினார்.







