• June 6, 2025

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டிய பாம்பன் பாலம்; வெங்கடேசன் எம்.பி.கண்டனம்

 பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டிய பாம்பன் பாலம்; வெங்கடேசன் எம்.பி.கண்டனம்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாம்பன் பாலம் 1914-ல் கட்டப்பட்டது. அது அன்றைய காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரெயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ரெயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்.டி.எஸ்.ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரெயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்கவில்லை . ரெயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.
அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர்.டி.எஸ்.ஓ.வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரெயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18.10.2024-ல் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரெயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும்,ரெயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரெயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை மந்திரி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *