கோவில்பட்டி பள்ளியில் வருமானவரி பிடித்தம் பணம் மோசடி; தலைமை ஆசிரியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கியில் செலுத்தப்படாமல் போலி வங்கி செல்லான் மற்றும் போலி ரசீது கொடுத்து ஏமாற்றப்பட்டது கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
4 ஆண்டுகளாக இது போல் பணம் வசூலிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படாமல் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் அளித்தனர்.
இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்தார், அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா இதுபற்றி விசாரணை மேற்கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் பாதிக்கப்பட்ட 18 ஆசிரியர்கள் சார்பில் ஆய்வக உதவியாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 406, 465,467,468,471 மற்றும் 420 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஜான்கனேஷ் முன் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆய்வக உதவியாளர் கண்ணன் , இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி வசந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வக்கீல்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். இறுதியில் முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.