பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில், இந்த தொடர் உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற இருக்கிறது.
கடந்த நான்கு தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியிருப்பதால் இந்திய அணியிடம் இருந்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று, உள்நாட்டில் மீண்டும் தனது மதிப்பை உயர்த்த ஆஸ்திரேலிய அணி துடிக்கும்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பல ஆண்டுகளாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே மோதி வந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. இந்த 5 போட்டிகளும் ஆஸ்திரேலியாவில் உள்ள 5 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடர் அட்டவணை:
முதல் டெஸ்ட்: நவம்பர் (22-26) பெர்த் மைதானம்,பெர்த். 2-வது டெஸ்ட்: டிசம்பர் (6-10) அடிலெய்டு ஓவல் மைதானம்,அடிலெய்டு. 3-வது டெஸ்ட்: டிசம்பர் (14-18) காபா மைதானம்,பிரிஸ்பேன். 4-வது டெஸ்ட்: டிசம்பர் (26-30) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்,மெல்போர்ன். 5-வது டெஸ்ட்: ஜனவரி (3 -7) சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி.
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள் : முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.
இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. 3-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றால் ஹாட்ரிக் சாதனையாக இருக்கும். எந்த அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்று முறை டெஸ்ட் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
