தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் உற்பத்தி: மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு 1999ம் ஆண்டு தனது முதல் ஆலையை இந்தியாவில் நிறுவியது. குஜராத் மற்றும் சென்னை என இந்தியாவில் இரண்டு இடங்களில் ஆலைகளை நிறுவியது.
2019ம் ஆண்டு வரை இந்தியாவில் கொடிகட்டி பறந்து வந்த விற்பனை, கொரோனா பெருந்தோற்றிற்கு பிறகு சரிய ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சனாட் பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையை அந்நிறுவனம் மூடியது. அப்பொழுது கடைசி காராக ஃபோர்டு ப்ரீஸ்டைல் காரை தயாரித்து அனுப்பி அந்த ஆலையை மூடியது.
பின்னர் 2022 ம் ஆண்டு சென்னையில் இருந்த கார் உற்பத்தி ஆலையையும் போர்டு நிறுவனம் மூடியது. இந்த நிறுவனத்தின் கடைசி காராக போர்டு நிறுவனத்தின் பிரபல SUV காரான EcoSport உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்களை சந்தித்து வரும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதனை தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது.
30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என பதிவிட்டு உள்ளார்.
சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த உற்பத்தியை கடந்த 2022-ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போர்டு நிறுவனத்தின் IMG தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர். ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து இந்த ஆலோசனையை மேற்கொண்டார். அப்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் .டி.ஆர்.பி.ராஜா, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.







