கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை, சரியான நேரத்தில் திறக்காததால் வளர்ப்பு நாயுடன் வியாபாரி மறியல்
.
கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்., கோபால் நேற்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் வளரும் நாய்க்கு தடுப்பூசி போடுவதற்காக எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்தார்.
வழக்கமாக 8 மணிக்கு திறக்க வேண்டிய கால்நடை மருத்துவமனை 8.30 மணிக்கு பின்னரும் திறக்கப்படவில்லை. அங்கு பணியாற்றும் அலுவலர்களும் யாருமில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபால் தனது வளர்ப்பு நாயுடன் சாலை நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு வந்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை நடுவே அமர்ந்து போராட்டம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டார். இதனால் அரைமணி நேரம் எட்டயபுரம் – கோவில்பட்டி சாலை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வந்த கால்நடை மருத்துவமனை ஊழியர்கள், கோபாலிடம் நாய்க்கு தடுப்பூசி வெளி மருந்து கடைகளில் தான் வாங்கி வர வேண்டும் என்றனர். இதனால் அவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், கோபால் நாய்க்கு தடுப்பூசி செலுத்தாமல் திரும்பி சென்றார்..
அரசு கால்நடை மருத்துவமனை காலை 8 மணிக்கு திறப்பதற்கு பதிலாக அடிக்கடி தாமதமாக திறக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.. எனவே, கால்நடை மருத்துவமனையை உரிய நேரத்தில் திறந்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.







