கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடை காரணம் காட்டி அவற்றை வழங்காமல் நிறுத்தியதை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
