பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய வீரர் திரும்ப ஒப்படைப்பு

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவரை எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர். சுமார் 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் பூர்ணம் குமார் ஷாவை மீட்பதற்காக ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

அதே சமயம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதல் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய பூர்ணம் குமார் ஷா தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

