பெற்றோர் உள்பட 4 பேரை வெட்டிக்கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம், ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் ஜீன் பத்மம். இவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார்.
இவர்களுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான கேதல் ஜின்சன் (வயது34) என்ற மகனும், டாக்டரான கரோலின் என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் வீட்டு வேலைக்காரி லதா என்ற பெண்ணும் தங்கியிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 -ந் தேதி கேதல் ஜின்சன் தனது தாய், தந்தை, சகோதரி மற்றும் வேலைக்கார பெண் ஆகிய 4 பேரையும் கோடரியால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் உடல்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி படுக்கை அறையில் பாதுகாத்து வந்தார். 3 நாட்கள் கடந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் 8-ந் தேதி உடல்களை வீட்டிற்கு உள்ளே கழிவறையில் தீ வைத்து எரித்தார்.
இதில் வீடும் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீ காயம் அடைந்த கேதல் ஜின்சன் அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது ராஜா தங்கம், அவரது மனைவி ஜீன் பத்மம், மகள் கரோலின் மற்றும் வேலைக்கார பெண் லதா ஆகியோரது உடல்கள் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கேதல் ஜின்சன், 4 பேரையும் கொடூரமாக கொலை செய்து, எரித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கேதல் ஜின்சனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பின்பு திருவனந்தபுரம் தம்பானூரில் வைத்து கேதல் ஜின்சனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது, தந்தை அடிக்கடி திட்டியதால் அவர் மீதான கோபத்தில் அனைவரையும் தீர்த்து கட்டியதாக கூறினார். மேலும் சில நேரங்களில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டார். இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கேதல் ஜின்சன் குற்றவாளி என கோர்ட்டு உறுதி செய்து அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று நீதிபதி விஷ்ணு தீர்ப்பு அளித்தார். அதில், தாய், தந்தை மற்றும் சகோதரி, வேலைக்காரியை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கேதல் ஜின்சனின் தாய்மாமா ஜோஸ் சுந்தரத்திற்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இவர் கேதல் ஜின்சனின் தாயார் ஜீன் பத்மம் பராமரிப்பில் வாழ்ந்துவந்தார்.
