10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16-ம் தேதி வெளியாகிறது

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதேபோல், 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்தது.

இதனையடுத்து தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
அப்படி இல்லையென்றால், ஏற்கனவே தெரிவித்து இருந்த தேதியில்தான் தேர்வு முடிவு வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று மதியம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடுத்தி உள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியான நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாக உள்ளது.

