நடிகர் ஜிபி முத்து வீடு முற்றுகை; கிராமமக்கள் வாக்குவாதம்


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலம் ஆகி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..
ஒவ்வொரு நாளும் பிரபலமாகி அவரது பொருளாதார நிலை உயர்ந்து வரும் நிலையில் அவரது சொந்த ஊரில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தனது மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்திருந்தார்.
அதில் உடன்குடி பெருமாள்புரத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பினால் அந்த தெரு காணாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாகவும் ஜி பி முத்து மிரட்டல் விடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஜிபி முத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய வீட்டை முற்றுகை இடுவோம் என்று அப்பகுதி மக்கள் கூறி இருந்தனர். இதனால் உடன்குடியில் உள்ள ஜி பி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் தன்னுடைய வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜிபி முத்து இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் ஜி.பி முத்து ஒழிக..ஒழிக… என்று கோஷம் போட்டனர். அப்போது கோபமான ஜிபி முத்துவும் தனக்குத்தானே ஒழிக ஒழிக என்று கோஷமிட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜிபி முத்துவையும் கிராம மக்களையும் சமாதானம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் பரப்பான சூழல் நிலவியது.
அந்த ஊரில் புதிதாக கட்டப்படும் கோவில் பற்றியும் , ஊர் மக்கள் பற்றியும் ஜி.பி.முத்து அவதூறாக பேசியதாக ஊர்மக்கள் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
ஊர்க்காரர்கள் அனைவரும் திரண்டு வந்த நிலையில் எதிர் தரப்பில் ஜிபி முத்து, அவரது குடும்பத்தினர் மட்டும் தனி அணியாக இருந்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

