மத்திய அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினராக மாற்றும் முயற்சி; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுக அரசுக்கு திமிர் அதிகமாகிவிட்டது. நம் பணத்தை வாங்கி நமக்கே கொடுக்கிறார்கள். ஒரு மத்திய அரசு ஊழியர் ஆர்.எஸ். எஸ் அமைப்பில் சேரலாம் என்று தெரிவித்தால் அது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினராக மாற்றும் முயற்சி.
இந்த அரசு சமூக நீதி காப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு மூன்று வருடத்தில் மட்டும் 50 சதவிகிதம் அளவுக்கு மொத்தமாக மின்சார கட்டணத்தை உயர்த்தி, மக்கள் பாதிப்படையும் வகையில் உள்ளது.
இதனால் பல சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கும் தன்மை ஏற்படுகிறது. நிர்வாகத்தை செம்மைப்படுத்தி இருந்தால் கட்டணத்தை ஏற்ற வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இவர்களை பொறுத்தவரை நிர்வாகத்தை சீர்படுத்தாமல் கட்டணத்தை ஏற்றி விடுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு தெரிந்த விஷயம்.
பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்க என்ன செய்யலாம் என்று அதற்கு ஒரு குழுவும், தமிழகம் பொருளாதாரம் ஏற்றம் காண ஒரு குழுவும் போட்டனர். அந்த இரண்டு குழுக்களும் என்ன செய்கிறது, விலை ஏற்றுவது தான் அவர்களின் அறிவுறுத்தலா!? எந்த வகையில் செயலாற்றினால் மின்கட்டணத்தை ஏற்றாமல் இருக்கலாம் என்று சிந்திக்கவில்லையா!?
சொத்துவரி, வீட்டு வரி, பால் கட்டணம் உயர்வு, தேர்தல் முடிந்ததும் மின்சார கட்டணம் உயர்வு. இனி பேருந்து கட்டண உயர்வு என்று பரிசு வரும்.
திமுக ஒருங்கிணைப்பு குழுவில் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லையே? வாழ்நாள் முழுவதும் திமுக கட்சிக்காக உழைத்து ஓடாக போன மனிதர் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்துவிட்டு போங்கள்.
இன்பநிதியை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருந்தால் கூட அவரையும் துணை முதலமைச்சர் ஆக்கி இருப்பார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசியல் அறியாத, படிக்காத உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினின் ஒரே மகன் என்ற ஒரே தகுதியை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நிழல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். பதவிக்காக தன்மானத்தை இழக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் கூட உதயநிதி துதி பாடுகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு ஆர்ம்ஸ்டார்ங் இறப்பிற்கு பெரிய அளவில் பேரணி நடத்தி பா. ரஞ்சித் தன் கருத்தை சொல்கிறார். ஆதிதிராவிட மக்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் பாதுகாப்பில்லை என்கிறார்.அவர்களுக்கு ஜால்ரா தட்டினால் ரஞ்சித் வாழ்க என்பார்கள். எதிராக பேசினால் யார் என்றே தெரியாது என்பார்கள்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.







