ஆஸ்பத்திரியில் இருந்து வீடியோ வெளியிட்ட வைகோ – “முழு நலத்தோடு மீண்டு வருவேன்”
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட வைகோ, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று (புதன்கிழமை) வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது., இதற்கிடையில் வைகோ ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-
நெல்லையில் நான் தங்கி இருந்த வீட்டில் நிலைகுலைந்து சாய்ந்துவிட்டேன். எனக்கு தலை, முதுகெலும்பில் அடிபட்டிருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன்.
நான் நன்றாக இருக்கிறேன்; முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். யாரும் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். முழு நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்.
எனது நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.
இந்த வீடியோவை வைகோ மகன் துரை வைகோ தனது x வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.







