• May 19, 2024

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்; கண்கள் தானம்

 நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்; கண்கள் தானம்

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து  ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத வில்லன் நடிகராக விளங்கியவர்  டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

சென்னையில் வசித்து வந்த டேனியல்  பாலாஜிக்கு   திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை  பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

நடிகர் டேனியல் பாலாஜியின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதை தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் மூலம் டேனியல் பாலாஜியின் கண்கள் அகற்றப்பட்டு வேறு நபருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் இன்னொருவர் கண்பார்வை பெற்றுள்ளார்

டேனியல் பாலாஜியின் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டேனியல் பாலாஜியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நேரிலும் ஏராளமானவர்கள் சென்று கண்ணீர்  அஞ்சலி செலுத்தினர்.

.சென்னை  புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மாள் காலனியில் உள்ள வீட்டில் டேனியல் பாலாஜி உடலுக்கு இயக்குனர்கள்  வெற்றிமாறன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கமல்ஹாசனை மிரள வைத்தவர்

மரணம் அடைந்த டேனியல் பாலாஜி  சென்னை தரமணி திரைப்பட கல்லூரியில்  படித்தவர். கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்சன்  மேனேஜராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

டெலிவிஷனில் வெளியான ராதிகாவின் சித்தி தொடரில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது அதில் இவருடைய பெயர் டேனியல். அதற்குப் பிறகு இவருடைய பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.

ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் டேனியல் பாலாஜி அறிமுகமானார். அதற்குப் பிறகு காதல் கொண்டேன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்த டேனியல் பாலாஜி  திறமையான நடிப்பு  மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமல்ஹாசனையே மிரட்டும் அளவிற்கு டேனியல் பாலாஜி நடித்திருப்பார்.

அந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதற்குப் பிறகு பல படங்களில் இவர் வில்லன்  கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்டார்.

வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வந்தது

நடிகர் விஜய்யோடு சேர்ந்து பைரவா, பிகில் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். பொல்லாதவன் மற்றும் வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இவருடைய வசன உச்சரிப்பிற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு அரியவன் என்ற படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது பல மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *