குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்
அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே
கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் தளங்களை சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடலில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் அவர்கள் தண்ணீரில் செல்லும் சிறப்பு விமானம் மூலம் ராமேஸ்வரம் பாம்பன்
முதல் கன்னியாகுமரி வரை தினமும் 3 முறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல் துறைமுக நுழைவுவாயில் பகுதிகளில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் துறைமுகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகு மூலம் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாவையொட்டி தூத்துக்குடி ஹெலிபேட் தளத்தில் இருந்து விழா நடைபெறும்
தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் வரை பிரதமர் மோடி குண்டு துளைக்காத காரில் செல்கிறார். இந்த கார் வருகிற 26-ந் தேதி
தூத்துக்குடி வர உள்ளது. மேலும் தமிழக போலீசார் சார்பிலும் ராமேஸ்வரம் மற்றும்
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.







