அரிசி, பூண்டு விலை உயர்வு
தமிழ்நாட்டில் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. குறிப்பாக கடந்த 2 மாதத்தில் சாப்பாடு அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.2௦ வரை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ ரூ.65க்கு விற்ற அரிசி இப்போது ரூ.85 க்கு விற்பனை ஆகிறது. விலை உயர்வுக்கு நெல் விளைச்சல் பாதிப்பு என்று காரணம் சொல்கிறார்கள்.

இதே போல் பூண்டு விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. கிலோ ரூ.300 வரை விற்ற பூண்டு தற்போது ரூ.500ஐ தாண்டி விட்டது. சில்லறை கடைகளில் ரூ.520 வீதம் விற்கிறார்கள்.மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் பருவ மழை தாமதம் காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நல்லெண்ணெய், துவரம் பருப்பு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு, பற்பசை, குளியல் சோப்பு, பிஸ்கட் என பெரும்பாலான பொருட்கள விலை அதிரடியாக உயர்ந்துள்ளன.
நல்லெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 க்கு மேல் உயர்ந்து உள்ளது. ஒரு லிட்டர் செக்கு நல்லெண்ணெய் ரூ.250 க்கு விற்றது. படிப்படியாக விலை அதிகரித்து இன்று ரூ.370க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.







