நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர்.
நெல்லையைச் சேர்ந்த, திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது வீட்டில் இருந்து ஒரு செல்போன் மற்றும் பிரபகாரனின் நாவல் புத்தகங்களை கைப்பற்றி உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி அவர் ஆஜராக வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
2022 ம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு பணம் வந்தது தொடர்பாக ஒரு வழக்கு விசாரணையில் இருக்கிறது. அது தொடர்பாக தற்போது மீண்டும் விசாரிக்க நோட்டீசு வழங்கி வீடுகளில் சோதனை மேற்கொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.







