நகைச்சுவை நடிகர் ‘போண்டா’ மணி மரணம் ; குடும்பத்துக்கு விஜயகாந்த் நிதி உதவி
நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. போண்டா மணிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 175 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு வீட்டில் இருந்தபோது நேற்று இரவு 10 மணிக்கு அவர் மரணம் அடைந்து விட்டார்.
போண்டா மணியின் மரண செய்தி அறிந்து திரை உலகினர் நேரில் வந்து போண்டா மணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்கள்.
நடிகர் விஜயகாந்த் போண்டா மணி குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். அதாவது, விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் நிதி உதவி வழங்கி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நடிகர்கள் சிங்கமுத்து உள்பட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.







