கோவில்பட்டி வாலிபர், மனைவியுடன் படுகொலை; காதல் திருமணம் செய்த 3 நாளில் பரிதாபம்
கோவில்பட்டியை சேர்ந்த லாரி லோடுமென் வசந்தகுமார். இவரது மனைவி சுமதி. இவர் தூத்துக்குடி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் மாரிச்செல்வம்(வயது 24) இவர் சிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர்களது குடும்பத்தினர் தூத்துக்குடி முருகேசன்நகரில் வாடகைவீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த பால்வியாபாரி முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(21). மாரிச்செல்வமும், கார்த்திகாவும் 2 வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனால் கடந்த 30ம் தேதி கோவில்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே சமூகமாக இருந்தாலும் காதல் திருமணம் செய்து கொண்டதால் கார்த்திகா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திருமணம் ஆன 3 வது நாளான நேற்று (2.11.2023) மாலை புதுமணத் தம்பதி முருகேசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பு அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் மாரிச்செல்வத்தையும், கார்த்திகாவை பார்த்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடிவந்து கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்து போனார்கள்.
இதை தொடர்ந்து கொலைக்கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர், புறநகர் டி.எஸ்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான காரணமும், கொலை செய்தவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வரை தெரியவில்லை. காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் கார்த்திகாவின் உறவினர்கள் இந்த் கொலையில் ஈடுபட்டனரா? அல்லது வேறு யாரும் இதில் ஈடுபட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.







