• October 21, 2026

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு போனஸ், தீபாவளிக்கு பிறகு கூலி உயர்வு ; உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு 

 தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு போனஸ், தீபாவளிக்கு பிறகு கூலி உயர்வு ; உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு 

கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொது மகா சபைக் கூட்டம்  நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க சாத்துார் கிளை தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார். 

ஆலோசனை கூட்டத்துக்குப்பின் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-

கூட்டத்தில் 2 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். வரும் தீபாவளிக்கு வழக்கம்போல் போனஸ் வழங்க முடிவு செய்து இருக்கிறோம். தீப்பெட்டிக்கு விலையை அதிகரிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சீனா சிகரெட் லைட்டர்கள் வந்து விட்டன.அவை தடையில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது. 

சிகரெட் லைட்டர் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் தெரிவித்தோம். அதை கவனத்தில் கொண்டு வந்து ரூ. 20க்கு குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை கொடுத்தார்கள். ஆனாலும்கூட சட்டப்படி வராமல் சட்டவிரோதமாக முன்பைவிட அதிகமாக நேபாளம் வழியாக வந்து ரூ. 10க்கு விற்கப்பட்ட லைட்டர் ரூ. 15க்கு ஏகபோகமாக விற்பனை நடந்து வருகிறது. 

இதனால், தீப்பெட்டி பண்டல் விலையை அதிகரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்றுமதி தொழிலிலும் சுணக்கம் வந்துவிட்டது. 

நைஜர் நாட்டில் உள்ள துறைமுகத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், அந்த நாடு வழியாக 7 நாடுகளுக்கு செல்லவேண்டிய தீப்பெட்டிகள் ஸ்தம்பித்து போய்விட்டது. 

ஏற்றுமதியும் ஸ்தம்பித்து உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. 

இந்த தருணத்தில், போனஸ் கொடுக்கவேண்டும். கூலியை உயர்த்தி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்களை நம்பி இருக்கிற தொழிலாளர்களுக்கு போனசும், தீபாவளிக்குப்பின் கூலி உயர்வு வழங்க உள்ளோம். 

எங்களுக்கு மின் கட்டணம் பெரிய சுமையாக உள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தால்கூட நாங்கள் அரசை நம்பி இருக்கக்கூடியவர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அரசுக்கு அணுசரணையாக இருந்து வருகிறோம். 

எங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டங்களில் ஈடுபடவில்லை. அரசு மின்கட்டணத்தை மறு சீராய்வுக்கு எடுக்கவேண்டும் என்று தீர்மானம் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *