கடம்பூரில் காட்சிப் பொருளாக உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க கோரி மனு
கோவில்பட்டி அருகே கடம்பூரில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து 2020ஆம் ஆண்டு அப்போதைய வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் கடம்பூரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் விரைந்து கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் புதிய அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது கோரிக்கையை மனுவையும் வழங்கினார்.







