கோவில்பட்டி திட்டங்குளத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பா.ஜனதா வழக்கறிஞர் பிரிவு மனு
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் நீதிபாண்டியன், கோவில்பட்டி கொட்டாட்சியருக்கு எழுதிய மனுவை அவரது உதவியாளரிடம் வழங்கினார், அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘
.கோவில்பட்டி வட்டம் திட்டங்குளம் கிராமத்தில் கிழமேலாக செல்லும் நீரோடை உள்ளது. தற்போது ஓடையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களில் வணிக ரீதியாக முதலீடு செய்துள்ளவர்கள் மேற்படி ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தோடு அந்த நிலத்தில் இருந்த வற்றாத கிணற்றையும் சட்டத்திற்கு புறம்பாக மூடியுள்ளனர்.
ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வரத்து தடுக்கப்பட்டுள்ளதோடு அந்த பகுதியில் நிலத்தடி நீரும் அதல பாதாளத்திற்க்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது என்றும், நீர் நிலைகளில் உள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் தெளிவுபட தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீர்நிலைகள், பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அதனை அகற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புக்கு துணை போன சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே வருவாய் கோட்டாட்சியர் இம்மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு திட்டங்குளம் கிராம் சர்வே எண்.282ல் உள்ள ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், சட்டத்திற்கு புறம்பாக மூடப்பட்ட கிணற்றினை திரும்பவும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திடவும் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடவும் உரிய உத்தரவு செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் நீதிபாண்டியன் கூறி இருக்கிறார்.







