தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சாலை மறியல்; 300 பேர் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி தரக்கோரி ஆலை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பேராட்டம் நடத்தியவர்களில் 10 பேர் மட்டும் ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் 5 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவித்து நின்றன.
மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சிலர் சாலையில படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மடத்தூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 100 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







