ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிக்கு முதல்- அமைச்சர் பாராட்டு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.
பொம்மன் நிரந்தர பணியாளராகவும், பெள்ளி தற்காலிக பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் பாகன் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியினர் பொம்மன் – பெள்ளியை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். அவர் விடுத்த அழைப்பின் பேரில் பொம்மன் – பெள்ளி தம்பதியினர் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.
அவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சால்வை அணிவித்து பொம்மன் – பெள்ளியைப் பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கினார்.தெப்பக்காடு மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உ ள்ள 91 பணியாளர்களுக்கு தலா 1 லட்சமும், வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவியும் அறிவித்தார்