அண்ணாமலை பற்றி கடம்பூர் ராஜூ பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுக்கு பா.ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த நாராயணன் திருப்பதி கூறி இருப்பதாவது:-‘
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அ தி மு கவின் கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன் , இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.
டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அ தி மு க தான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல.
மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே!
அண்ணாமலை செல்வி ஜெயலலிதாவை பெருமைப்படுத்தியே பேசினார் எனபதை கூட புரிந்து கொள்ள முடியாத , ஒரு சிறந்த தலைவரை போல், தான் இருப்பேன் என்று அண்ணாமலை பேசியதில் ஜெயலலிதாவின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது.
கட்சியை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள்.
நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறி இருக்கிறார்.
பா.ஜனதா வை சேர்ந்த தினேஷ் ரோடி கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் பேசி இருப்பது விரக்தியின் உச்சம். அதிமுகவில் இருந்த தொண்டர்களும் தலைவர்களும் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து விட்டதால் அரசியலில் என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் விரக்தியில் பேசி வருகிறார். அதன் வெளிப்பாடு தான் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைமிகவும் கீழ்த்தரமாக ஒருமையில் பேசி வருகிறார்.
கோவில்பட்டியில் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தான் இருப்பார் என்பதை உணர்ந்து தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ள மேடைக்கு மேடை எங்கள் மாநிலத் தலைவரை நினைத்து புலம்பி வருகிறார்.
எந்த வாயால் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று பேசினார்களோ அதே வாயால் அண்ணாமலையால் தான் எங்களை வழிநடத்த முடியும் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கூட்டணியில் இருந்து கொண்டு தலைவர் அண்ணாமலையையும் பாரதிய ஜனதா கட்சியையும் அவர் விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இது பன்னிரெண்டாவது முறை. தொடர்ந்து பேட்டிகளில் மறைமுகமாக பாஜகவையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் கூட்டணி தொடர்ந்தாலும் கூட ஒரு பாஜக தொண்டன் கூட கோவில்பட்டியில் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இது ஒன்றும் பழைய காலம் அல்ல நீங்கள் பேசுவதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க. பாஜகவின் கூட்டணி இல்லாமல் ஒரு தொகுதியில் கூட இனி அதிமுக வெற்றி பெற முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறினால் அதனுடைய விளைவுகளை நிச்சயம் சந்திக்க நேரிடும்.
தினேஷ் ரோடி கூறி இருக்கிறார்.