• November 15, 2024

பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்; திருமாவளவன் விளக்கம்

 பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்; திருமாவளவன் விளக்கம்

திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 பா.ஜ.க. தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது. பா.ஜ.க.வையும் வீழ்த்த முடியாது. நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளுக்கும் அவர் உணர்த்தி உள்ளார். மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்தது இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டும். தனித்து போட்டியிடுவதால் ஏற்படுகின்ற விளைவுகளை தெரிவித்து அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளும் ஓரணியில் திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாக பேச வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

பா.ம.க.வினர் அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதால் ஏதோ நான் அச்சப்படுவதாகவும், கலக்கமடைவதாகவும் கற்பனையான கருத்துக்களை பேசி வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையில் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். உதாரணமாக நான் பிரதமரை சந்திப்பதால் பா.ஜ.க.வுடன் இணைய போகிறார் என்று அர்த்தம் இல்லை.

பா.ம.க.விற்கு ஒரு கலாசாரம் உண்டு. கூட்டணியில் இருக்கும் போது அடுத்த தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ அந்த கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்பார்கள். இதற்கு காரணம் எந்த பக்கமும் பேச முடியும் என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டுவது ஆகும். இது பேரத்தை அதிகரிப்பதற்கான செயல்.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகி நிற்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். இது அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று தி.மு.க. கருதத் தேவையில்லை, தி.மு.க.வுடனும் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம் என்ற சமிக்கைஞ தானே. தவிர வேறொன்றுமில்லை.

தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு அ.தி.மு.க.வில் பேரத்தை கூட்டுவது, அ.தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு தி.மு.க.வில் பேரத்தைக் கூட்டுவது இது அனைத்தும் பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் தி.மு.க. கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது.. இவ்வாறு திருமாவளவன்  கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *