கோவில்பட்டியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு; கூடுதல் பஸ் நிலையம் முன்புறம் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு காஷ்மீர் – கன்னியாகுமரி தங்க நாற்கர சாலை அருகில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கபட்டு திறக்கப்பட்டது.
ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக முழுமையாக கூடுதல் பஸ் நிலையம் செயல்படவில்லை. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லமால் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு,வந்தன.
இந்த நிலையில் கடந்த வாரம் அரசு பெண் ஊழியர் ஒருவர் நான்குவழி சாலையில் இறக்கி விடப்பட்டார். அவர் சாலையை கடந்தபோது கார் மோதி இறந்து போனார். இதை தொடர்ந்து அணைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
ஆனாலும் இன்று வரை சென்னையில் இருந்து கோவில்பட்டியை கடக்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் பஸ் நிலையம் செல்லாமல் நான்கு வழிசாலையில் ஆபத்தான வகையில் பயணிகளை இறக்கி விடுகிறார்கள.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்திராஜ் இன்று கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம், சர்வீஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற் கொண்டார். அனைத்து அரசு விரைவு மற்றும் ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் முன்பு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தாசில்தார் சுசீலா, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் முன்புறம் நின்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதனை நடைமுறைப்படுத்தவும் , கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்,
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் மற்றும் நகரின் உள்ளே இருக்கும் அண்ணா பஸ் நிலையத்திற்கு இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு சர்வீஸ் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆட்டோ கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக புகார் வந்துள்ளதால், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இன்னும் 5 மாதத்திற்கு தற்காலிக தினசரி சந்தை செயல்படும், அதன் பின்னர் 5 கோடி ரூபாயில் கூடுதல் பஸ் நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டு முழுவதுமாக செயல்படும்.
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.