ஒரு மாதம் அவகாசம்: வணிக நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் இல்லாவிட்டால் கருப்பு மை பூசி அழிப்போம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக, பாட்டாளி மக்கள் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்தினார். இந்த பயணம் கடந்த 21-ந் தேதி சென்னையில் தொடங்கி நேற்று 8-வது நாளாக மதுரையில் நிறைவடைந்தது.
இதற்கான நிறைவு விழா நிகழ்ச்சி, உலக தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடந்தது. பாலபிரஜாபதி அடிகளார் முன்னிலை வகித்தார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே..மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில ெபாருளாளர் சிவகாசி திலகபாமா பேசினார். விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- \
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணுக்கு தமிழைத்தேடி, ஆசையோடு வந்திருக்கிறேன். ஆனால் இங்கும் தமிழன்னையை காண முடியவில்லை. எங்கும் தமிழே இல்லை. தமிழைத்தேடி என்ற வார்த்தையை சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. அன்னை தமிழை காக்க இன்னொரு மொழிப்போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
ஆங்கில மோகம் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை இல்லை என இரு சிக்கல்களை அன்னைத்தமிழ் சந்தித்து வருகிறது. இந்த சிக்கல்களை நாம் எளிதாக தீர்த்து விடலாம். மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள், ஆலயங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும்.

நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை. முதலில் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். தாய் மொழியான தமிழ் தெரியாமல் பிற மொழிகளை கற்றுக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. “தாய் மொழி கற்காமல் பிற மொழிகளை கற்பவர்கள் பேடிகள்” என்று காந்தி கூறியிருக்கிறார். உங்களுக்கு அதனை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ் மொழியில் பேசுவோம். தமிழில் எழுதுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். திருமணம், காதணி விழா, முன்னோர் வழிபாடு, இல்லற பண்பாடு ஆகியவற்றில் பண்பாட்டு சிதைவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது அடையாளம் தமிழ் தான். அதனை இழந்துவிட்டால் நாம் அனைத்தையும் இழந்து விடுவோம். தமிழை எதற்காகவும் இழக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழின் வளர்ச்சிக்காக தமிழக அரசு ஏதும் சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்ப்பவர்கள் தமிழக அரசுடன் தான் பேச வேண்டும். மாறாக கோர்ட்டுக்கு செல்லக்கூடாது.
வணிக நிறுவனங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தருகிறோம். அவர்களின் பெயர் பலகையில் தமிழ் இல்லை என்றால், அதனை நானும் அடிகளாரும் கருப்பு மை வாளியோடு, ஏணியோடு சென்று பூசி அழிப்போம். இந்த போராட்டத்தை சென்னை அல்லது குமரியில் தொடங்குவோம்.
இந்த போராட்டத்தை போல தமிழை வளர்க்க பிற போராட்டங்களையும் முன்னெடுப்போம். இந்த போராட்டங்கள் எல்லாம் வேறு மொழிக்கு எதிரானது இல்லை. இவை அனைத்தையும் அன்னை தமிழை காக்கத்தான். தமிழகத்தில், தமிழை வளர்க்க அரசு போடுகின்ற சட்டங்களுக்கு எதிராக யாராவது உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்ந்து இருந்தால், அதனை அவர்கள் திரும்ப பெற வேண்டும். இனி வழக்கு தொடரக்கூடாது. அவர்களை நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்.
இளைஞர்களை தயார்படுத்துவோம். ஆங்கில வழியில் கல்வி கற்று கொடுப்பதற்கு பதிலாக பொறிக்கடலை விற்று பிழைக்கலாம். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்னை தமிழை மீட்ெடடுப்போம். தமிழன்னையை காப்போம். தமிழை வளர்ப்போம். தமிழை வளர்க்க உறுதியேற்போம். அதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.








