கோவில்பட்டி மார்க்கெட் பிரச்சினை: சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்; வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடம்பூர் ராஜூ பேச்சு
கோவில்பட்டியில் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்குள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடி மதிப்பில் புதியதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தினசரி சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை தற்காலிக சந்தை ஜன.26-ம் தேதி முதல் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6, 7-ம் தேதிகளில் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களை , வியாபாரிகள் சங்கத்தினர் புறக்கணித்ததால், குலுக்கல் முறையில் தற்காலிக சந்தையில் கடைகள் தேர்வு செய்யும் பணியும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவில்பட்டி நகராட்சி சந்தையில் தற்போது இயங்கி வரும் அனைத்து கடைகளுக்கு பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வணிகர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகளை திறக்காமல் தினசரி சந்தை நுழைவாயில் முன்பு பந்தல் அமைத்து போராட்டம் நடத்த வியாபாரிகள் தயாராகினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லாமல் பந்தல் அமைக்க கூடாது என தெரிவித்தனர். இதை எடுத்து வியாபாரிகள் தினசரி சந்தையின் உள்பகுதியில் பந்தல் அமைத்து அதில் அனைவரும் அமர்ந்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாகும் வகையில் நாளும் பொழுதும் வளரும் நகரமாக உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போது, வியாபாரிகள் பிரச்சினை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டமன்றத்தின் வாயிலாக வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

கொரோனா காலத்தில் தற்காலிக சந்தை கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டது. அப்போது போக்குவரத்து கிடையாது. ஆனால், தற்போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் எப்படி சென்று வரமுடியும். அந்த பேருந்து நிலையமே பயன்பாடற்றது என்பதால் தான் எங்கள் ஆட்சி காலத்தில் அதனை செயல்படுத்தவில்லை.
தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் 400 கடைகள் வரை இங்கே கட்டலாம். இதற்கு நிதியும் உள்ளது. இதுகுறித்து நாங்கள் சட்டமன்றத்தில் பேச உள்ளோம். இதனை அதிமுக வெற்றிகரமாக நடத்தி தருவோம், இவ்வாறு கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
தினசரி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனர் க.தமிழரசன், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் வீ.வேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்த பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்,.







