ஐ.டி.நிறுவன ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை
திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்.இவரது மகன் ராஜபாண்டி (வயது 32 ).இவர் பி சி ஏ படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை, சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்து பணி செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜபாண்டியன் தந்தை பாண்டியனின் சகோதரி அய்யம்மாள் என்பவருக்கும் பாண்டியனுக்கும் பூர்வீக வீட்டடி சொத்து தகராறு கடத்த 7 வருடமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அய்யம்மாள் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட முயற்சி செய்து அதற்கான அனுமதி பெற்றிருந்தார்.
ஆனால் பூர்வீக சொத்து என்பதால் ராஜபாண்டியன் அந்த இடத்தில் அய்யம்மாள் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அய்யம்மாள் தாடிக்கொம்பு காவல் நிலையத்திலும் திண்டுக்கல் நில அபகரிப்பு பிரிவு புகார் கொடுத்தார். இதில் நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு இருதரப்பினரும் சென்று விட்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்.
இதனிடையே நேற்று மதியம் வீட்டில் ராஜபாண்டி மட்டும் தனியாக இருந்தபோது அங்கு வந்த சக்திவேல் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராஜபாண்டியை அடித்து உதைத்ததோடு சம்பட்டியால் தலையில் அடித்தார். .இதில் படுகாயம் அடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள சித்ரா, அய்யம்மாள், பாலாஜி ஆகியோரை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர்.







