கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த வளைகாப்பு விழா
போலீஸ் நிலையங்களில் வழக்கமாக கைதிகளிடம் விசாரணை, திருட்டு வழக்குகளில் பிடிபட்டவர்களிடம் முரட்டுத்தனமான விசாரணை, சமாதான பேச்சு வார்த்தை நடப்பது வழக்கம்.
எப்போதாவது காதல் ஜோடி தஞ்சம் என்று வந்தால் இரு தரப்பினரையும் அழைத்து பேசி காதல் ஜோடிக்கு போலீசார் திருமணம் செய்து வைப்பார்கள். இந்த் நிலையில் போலீஸ் நிலையத்தில் அங்கு பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா நடந்து இருக்கிறது.
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அருள்மொழி (வயது 30). இவருடைய கணவர் சதீஷ் (34), கழுகுமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நேரடியாக தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள்மொழிக்கு கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சக போலீசார் நேற்று வளைகாப்பு விழா நடத்தினர். வீட்டில் உறவினர்கள் சூழ்ந்து வளைகாப்பு விழா நடத்துவது போன்று போலீசார் அருள்மொழிக்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமமிட்டு, சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சுஜீத் ஆனந்த், மங்கையர்கரசி மற்றும் போலீசாரும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.







