கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையை சுருக்காமல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்; கோட்டாட்சியரிடம் மனு
கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடை கடைகள் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் சார்பாக நடத்திய போராட்டத்தின் காரணமாக, மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு ஓடையை விரிவுபடுத்தி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையொட்டி ஓடையின் கீழ்புறம் நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்கள். நீர்வரத்து ஓடை அளவை குறைத்து குறுகலாக தடுப்புச்சுவர் கட்டப்படுவதாகவும், தரம் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீர்வரத்து ஓடை அகலத்தை அளந்து தடுப்புச்சுவர் கட்டும் பணியை தொடர வேண்டும் , தரத்துடன் சுற்று சுவர் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் நிறுவனர் செல்லத்துரை என்று செல்வம், நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்
பின்னர் கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்,







