பார்வையற்றோருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்படும்; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
கோவில்பட்டியில் உள்ள உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் உலக மாற்றுதிறனாளிகள் தினம் மற்றும் லூயி பிரைலி பிறந்ததினத்தையொட்டி பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:-
லூயி பிரைலி கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான பிரைலி எழுத்து முறையினால் தான் பார்வையற்றவர்கள் வாழக்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். லூயி பிரைலி பார்வையற்றவர்கள் முன்னேற்றத்துக்கு உதவியது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பார்வையற்றவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.’
பார்வையற்றவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கடினமாக இருக்கிறது.அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திகொடுக்க வேண்டும் என்றால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் அவர்கள் குடியிருக்கும் வீடும், பணிபுரியும் இடமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே அனைவருக்கும் ஒரே இடத்தில் பட்டா வழங்கி வீடு கட்டிகொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது பட்டா மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே 20 சென்ட் நிலத்தில் சமுதாய கூடம் அமைத்து கடலை மிட்டாய், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழில்கள் அமைத்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்படும். இந்த திட்டம் இன்னும் 6 மாதத்தில் செயலுக்கு வந்து விடும்,
கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும், சிறு, குறு தொழில்கள் துறை மூலம் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் வீடுகள் கட்டித்தரப்படும். இத்திட்டம் மற்ற மாவட்டங்களில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கும் ஒரு முன்மாதிரி திட்ட்டமாக அமையும்.’
மாற்று திறனாளிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசிடம் கேட்டால் பல திட்டங்கள் கிடைக்கும். .
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், வட்டாட்சியர் சுசீலா, உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை நிறுவனர் மரியதாஸ் , ஜே.சி.இ.தலைவர் பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்,.







