கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள்; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.எச்சரிக்கை
கோவில்பட்டி மெயின்ரோட்டில் சாந்தி மெடிக்கல் அருகே ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடையானது, 2 ஆண்டுக்கு முன்பு சாலை அகலப்படுத்தப்படும் போது அகற்றப்பட்டது.
தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் செலவில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி மெயின்ரோட்டில் நீர்வரத்து ஓடை மீது ஆக்கிரமிப்பு செய்து இருந்தவர்கள் கட்டி இருந்த கடைகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அ.தி.மு.க ஆட்சியின் போது அகற்றப்பட்டது.
தற்போது அந்த ஓடையில் தடுப்பு சுவர் கட்டுவதாக கூறி ஓடையின் அளவை குறைப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது, 80 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருக்கிறது, அந்த இடத்தில் தடுப்பு சுவர் என்ற பெயரில் ஓடையின் அகலம் குறைக்கப்படுவது பற்றி மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறேன்,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருக்கின்றன், அதன்பிறகு அந்த இடத்தில் எது செய்தாலும் உச்ச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தான் செய்யவேண்டும்.

இதனை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் நான் நீதிமன்றம் செல்வேன்/ தவறு செய்யும் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக சிறைக்கு செல்வார்கள் எனவே அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ..கூறினார்.







