கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு அரசுதான் முழு காரணம் ; டி. ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழகத்தில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் பங்கு பெற்று தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டினார். காலில் ஏற்பட்ட ligament பிரச்சினை காரணமாக முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.
ஆனால் இப்படிப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய காரணத்தினால் பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை யாருடைய தொகுதியில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
அதாவது அந்த மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் இருக்கிறது. அந்த மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் உயிர் பிரிந்திருக்கிறது.
கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,செல்வி பிரியாவின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்ததோடு, விடியா தி-.மு.க. அரசு இதற்கு பொறுப்பேற்று 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “நாங்கள் தவறு செய்தால் வருத்தம் தெரிவிப்போம்” என்கிறார். இது எப்படி இருக்கிறது. சுகாதார துறை அமைச்சருக்கு உயிர் என்ன அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா?
இன்றைக்கு மருத்துவ துறை அபார வளர்ச்சியடைந்துவிட்டது. அனைத்து நோய்களையும் சரி செய்வதற்கான மருந்துகளும் கிடைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ligament பிரச்சினையால் ஒரு உயிர் போகிறது என்கிற போது எந்த அளவிற்கு மருத்துவ துறை சீரழிந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
மேலும் அஞ்சலி செலுத்தும்போது உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தினர் “எங்க பெண்ணை கொன்றுவிட்டார்களே, கொன்று விட்டார்களே. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது” என்ற வார்த்தைதான் காதில் விழுகின்றன. எனவே இந்த மரணத்திற்கு முழு காரணம் இந்த அரசுதான்.
மக்கள் பயன் பெறுகின்ற வகையில், பொது மருத்துவமனை, புறநகர் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் இருக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு வருபவர்களை அக்கறையோடு பார்த்தால் நிச்சயமாக இப்படிப்பட்ட மரணங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த விடியா தி.முக. அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டியிருக்கிறது. எனவே அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்








