பசும்பொன் செல்லவில்லை: சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கபப்ட்டது. இந்த நிலையில் அவர் பசும்பொன் செல்லவில்லை என்றும் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும் தெரிய வந்துள்ளது.
30-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் அனுமதி கேட்டு அதற்குரிய கடிதத்தை சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று நேரில் அளித்தார்.
மேலும் அவர் அந்த மனுவில் , இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். எனவே இந்நிகழ்ச்சிக்கான அனுமதியும், பாதுகாப்பும் வழங்குமாறு கேட்டுகொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.







