தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நன்றி. இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஸ்டெர்லைட்டிற்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவுமண்டபம் கட்ட வேண்டும். விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் அறிக்கையில், ‘மக்கள் நியாயமாக போராடிய போது திட்டமிட்டு மறைந்து இருந்து தாக்கியதும், சுட்டுக்கொன்றதும் தெளிவாக தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 17 பேரையும் முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்ற ரஜினிகாந்தின் கருத்தை அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் கண்டித்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.







