எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு: கோவில்பட்டியில் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 அன்று கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் பஸ் நிலைய பகுதியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.







