• November 23, 2026

பிளஸ்-1 மாணவி குத்திக்கொலை ; விஷம் குடித்த காதலன் ஆஸ்பத்திரியில் அனுமதி

 பிளஸ்-1 மாணவி குத்திக்கொலை ; விஷம் குடித்த காதலன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் அபர்ணா (வயது 17). இவர் செபத்தையாபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது உறவினர் பக்கத்து வீட்டை சேர்ந்த காசிப்பாண்டியன் 

மகன் முத்துராஜ்(23). இவர் ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், அபர்ணாவும் காதலித்து வந்தனர்.இதுபற்றி அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு ஆதரவு தெரிவித்து படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

அபர்ணா செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார். இது முத்துராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன் சந்தேகத்தை உண்டாக்கியது.நேற்று பகலில் வீட்டில் அபர்ணா தனியாக இருந்தார். அங்கு முத்துராஜ் சென்றார். அவர்கள் 2 பேரும் வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் தான் மறைத்து  வைத்திருந்த கத்தியை எடுத்து அபர்ணாவை சரமாரியாக குத்தியதாகவும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் அபர்ணா ரத்த வெள்ளத்தில்  உயிருக்கு போராடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட முத்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அபர்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செபத்தையாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அபர்ணா உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்து உடனடியாக சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு நிரேஷ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார், முத்துராஜை தேடினார்கள். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவர் விஷம் குடித்து  தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.உடனடியாக போலீசார் அங்கு சென்று, முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *